மேதகு திரைப்படம் தமிழ் திரை கலையின் பயம் போக்கிய ஒரு நிமிர்வு

திட்டமிட்ட சிறிலங்காவின் தமிழின அழிப்பை திருப்பி அடித்து தான் நிறுத்தவேண்டும் என்று எழுந்த தமிழ் மாவீரனின் ஆரம்ப கால வரலாற்றை பயமின்றி நிமிர்வாக சொல்கிறது மேதகு திரைப்படம். இதுவரை எந்த ஒரு தமிழ் திரைத்துறையினரும் ஆசை இருந்தாலும் எடுக்க துணியாத தமிழரின் வரலாற்றில் மிக முக்கிய பகுதி இது. தமிழ் புலிகள் ஏன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் எனும் காரணங்களின் சிலவற்றை சொல்லும் இந்த படம் பல தடைகளை தாண்டி தான் வெளிவந்துள்ளது. Famili Man போல தமிழர் வரலாற்றை குப்பை என சொல்லும் அல்லது தமிழீழ செய்திகளை ஊறுகாய் போல பாவிக்கும் பணக்கார திரை செருக்குகளுக்கு தமிழனின் எளிமையான உறுதியான பதில் தான் மேதகு படம். தமிழர் வரலாறு தெரியாதவர்களுக்கு இது ஒரு தொடக்க பாடம், வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒரு நிமிர்வு. தமிழர் பெருமை கொள் தமிழீழ வரலாற்றை குழி தோண்டி புதைக்கலாம் என்பவர்களுக்கு இது இறுக்கமான மறுப்பு. இந்த படம் சீனா இந்தியாவின் கொல்லையில் அடுத்த அதிகார மையமாக உருப்பெறும் சரியான நேரத்தில் தான் வெளிவந்துள்ளது.
 
குறைந்த நிதியில் தமது திறமை துணிவு இரண்டையும் மட்டும் நம்பி மிக சிறப்பாக நிச்சயம் கூற வேண்டிய தமிழர் வரலாற்று பகுதியை செதுக்கி உள்ளது இத் திரைப்படம். தமிழர் தலைவர் மேதகு பிரபாகரன் பெயர் இன்னும் பல நூற்றாண்டுகள் தமிழர்களால் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் ஆழ பதியும் பெயர். சேகுவாராவின் பெயரையோ நெல்சன் மண்டேலாவின் பெயரையோ, பகத்சிங் பெயரையோ எந்த வல்லரசும் வரலாற்றில் மறைக்க முடியாது. அதேபோல்  தமிழர்களின் சூரியன் தமிழரின் இறைமையின் அடையாளம் பிரபாகரன் பெயரையும் எந்த தடை எனும் கரும் முகில் கூட்டமும் பலகாலம் மறைக்க முடியாது. இந்த திரைப்படம் அதை இடித்துரைக்கும் முதல் படி.
தமிழீழ அரச படைகளின் எதிரிகளாக இருந்த சிறிலங்கா படை தளபதிகள் கூட மேதகு பிரபாகரனின் நேர்மையை வீரத்தை குறை கூறுவதில்லை. தமிழ் புலிகள் வரலாறும் அது போல தான். இந்த திரைப்படத்திற்கும் அந்த வரலாற்றை முறையாக திரையில் தொடக்கி வைத்த பெருமை உண்டு. திரைக்குழுவை எதிர்கால தமிழர்கள் நன்றியுடன் பார்ப்பார்கள். காமராஜ் எனும் திரைப்படம் மிக எளிமையாக அதே நேரம் ஆழமாக ஒரு நேர்மையான ஆளுமையை சொல்லும் படம். மேதகு படமும் அப்படியே எளிமையான அதே நேரம் வீரம் உறுதி அறம் சேர்ந்த இளகிய மனம் படைத்த தமிழர் வரலாற்று தலைவரின் இளமை காலத்தை திரையில் கொண்டு வருகிறது. 

இரண்டாம் உலகப் போர் மற்றும் உலக போராளிகளின் வரலாறுகள் பல திரைப்படங்களாக வந்துள்ளன.தமிழரை  போன்ற நாடற்ற தேசிய இனங்கள் தம்மை பாதுகாக்க உரித்துடையவை. சமாதானம் பேசும் எந்த ஒரு நாடும் பாதுகாப்பு படை இல்லாமல் இல்லை.  ஒரு தேசிய இனம் தம்மை இனஅழிப்பில் இருந்து காத்துக்கொள்ள போராடியதை தமிழ் எதிர்ப்பு   திரைப்படங்களால் சேறு வாரி தூற்ற, அதை இனியும் பார்த்திருக்க தமிழ் கலைஞர்கள் எல்லோரும் அடிமைகள் இல்லை என்பதை கூறி நிற்கும் படம் தான் மேதகு. புத்த பிக்கு தமிழருடன் ஒப்பந்தம் செய்த பண்டார நாயக்கவை சுடுவதில் இருந்து, தமிழாராச்சி மாநாட்டு படுகொலைகள் என்று மிக காத்திரமான அதே நேரம் எளிமையான காட்சிப்படுத்தல்கள் படம் முடியும் வரை தமிழர் தரப்பு நியாயங்களை சமரசமின்றி சொல்லி நிற்கிறது.


புலம் பெயர் தமிழ் திரைக்கலைஞர்கள் கூட சுதந்திரம் அதிகம் உள்ள நாடுகளில் வசித்தாலும் சிறிலங்காவுக்கு பயந்து தமிழர் போராட்ட நியாயங்களை கூறும்  ஒரு உண்மை கதையை மையமாக வைத்து படம்  எடுக்க இதுவரை துணிந்ததில்லை. நூறு வருட தேர்ச்சி பெற்ற தமிழ் நாடு சினிமா துறைக்கும் ஈழ தமிழர் உரிமை போராட்ட படம் எடுத்தால் பண இழப்பு ஏற்படும் என்ற பயம் அதிகம். தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பாகுபலி போல தான் படம் எடுக்க விருப்பம் ஆனால் தமிழ் சினிமா இதுவரை தந்தது  ஒன்றிரண்டு விதிவிலக்கு போக பாதி பலியான படங்களை தான். இதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு தடை செய்யும் என்ற பயம் தான். இனி சீன அரசு தடை செய்யும் என்ற பயமும் இருக்கும். மேதகு திரைப்படம் இந்த பயம் போக்க திருப்பி அடித்த படம். இதை புலம் பெயர் தமிழர்கள் தான் போற்றவேண்டும் நிதிநிலையில் வெற்றியடைய செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் தமிழரின் கதைகள் அடுத்த தலைமுறைக்கு செல்லும்.  

இந்த திரைப்படம் புலம்பெயர் தமிழர்களின் சராசரி படங்களை விட குறைவான நிதியில் தான் படமாக்கி இந்த திரைப்படத்தை தயாரித்து  உள்ளார்கள். தயாரிப்பாளர் இல்லாமல்  தமிழ் மக்களிடம் சிறு சிறு அன்பளிப்புகளின் மூலம் தான் படத்தை தமது வியர்வை சிந்தி செதுக்கி உள்ளனர் திரைக்குழுவினர். வரலாறுகளை திரைப்படமாக எடுப்பது என்பது கடினமானது ஏனெனில் ஓரிரு மணித்துளி திரையில் காண பெரிய குழுவாக  அதிக காலம் பணியாற்ற வேண்டும். நேர்த்தியும் முடிந்தளவு அந்த காலப்பகுதியில் உண்மைத்தன்மையும் இருக்கவேண்டும். அர்ப்பணிப்பும் ஓர்மமும் இருந்தால் மட்டும் தான் இது சாத்தியம். இதனால் தான் வரலாற்று படங்களை இயக்க கூடிய இயக்குனர்கள் மிக குறைவு. மேதகு தமிழர் திரையில் நிரந்தரமான திரைப்படம்.  இது போல் பல திரைப்படங்கள் இனி வரவேண்டும்.  வளமை போல தமிழ் உணர்வாளர்கள் தான் இதற்கு ஆதரவு தந்து அடுத்த படிக்கு நகர்த்த வேண்டும். இதுபோல் படங்கள் இனி வரும் போது உலக அளவில் விநியோக தடங்கல்கள் இருக்க கூடாது. தமிழருக்கான  தமிழர் சார் வரலாறு தாங்கி செல்லும் படங்களை நிதி நிலையில் சோர்ந்து போகாது பார்க்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களில் சில தமிழ் உணர்வாளர்கள் முயன்றாலே  இது போன்று வருடம் ஒரு தமிழீழ வரலாற்று திரைப்படத்தை கொண்டு வர முடியும். 

Movie details: https://www.imdb.com/title/tt14923112/
How to watch:  
visit bsvalue.com
Select country and provide your 10 digit phone number
Click Pay and it will send the code to your phone to watch

Comments

Popular posts from this blog

The future of Tamil Eelam history based movies

The Introduction of the United States H.Res.413 Resolution and the Tamil Diaspora

சீனா கொல்லையில் நின்றாலும் தமிழர் வரலாற்றை அழிக்க முனைப்பெடுக்கும் இந்தியா